இலங்கை ஏகாதிபத்திய நாடுகளின் காலனித்துவத்திற்கு அடிமைப்பட்டதல்ல – ஜனாதிபதி!

July 14th, 2009 Save & Share

இலங்கை ஒரே கொடியின் கீழ் செயற்படுகின்ற கௌரவமிக்க நாடே தவிர உலகத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள் என்று சொல்லிக்கொள்கின்ற ஏகாதிபத்திய நாடுகளின் காலனித்துவத்திற்கு அடிமைப்பட்ட நாடு அல்ல.

எங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்ற பிரிவினருக்கு எமது மக்களின் தீர்ப்பு என்னவென்பதை நாங்கள் காண்பிக்கவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஏழ்மை என்பது வசனத்தில் மட்டுப்படுத்தப்படும், அதுவே எமது பொறுபாகும். மாவட்டங்களில் ஏழ்மை எனும் எல்லைக்கோட்டை அழிப்பது மாகாண சபையின் பொறுப்பாகும் என்றும் அவர் சொன்னார்..

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மொனராகலை மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை அலரிமாளிகையில் இன்று திங்கட்கிழமை சந்தித்த கலந்துரையாடிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;

எல்லை கிராமம் என்ற வசனம் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டது போல ஏழ்மை என்ற வசனத்தை இலங்கையிலிருந்து நீக்கிவிடுவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். நாட்டிலுள்ள சகல ஏழ்மையான கிராமங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டு அங்குள்ள மக்களும் அபிவிருத்தியின் பெறுபேறுகளை அனுபவிக்கவேண்டும். அதற்காக அரசாங்கத்தின் சகல அமைச்சர்களும் அதிகாரிகளும் பொறுப்புடன் இருக்கின்றார்கள்.

பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகியிருந்த மொனராகலை மாவட்டம் அபிவிருத்தியில் ஓரளவிற்கு பின்னடைந்த மாவட்டமாகும் என்பதால் அந்த மாவட்டத்திலுள்ள சகல ஏழ்மையான கிராமங்களையும் அபிவிருத்தியடைய செய்யவேண்டியதன் பொறுப்பு மாகாண சபைக்கு வழங்கப்படவிருக்கின்றது.

அதற்காக சரியான தலைமைத்துவத்தை தேர்ந்தெடுத்து கொள்வது பிரதேச மக்களின் பொறுப்பாகும். பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து நாட்டை ஐக்கியப்படுத்தி ஒரு கொடியின் கீழ் கொண்டுவந்ததன் பின்னர் நடத்தப்படுகின்ற முதலாவது தேர்தலே ஊவா மாகாண சபைத்தேர்தலாகும்.

உலகத்திலுள்ள சிலர் கடந்த காலங்களில் எங்களுக்கு முடிந்தளவு அழுத்தங்களை கொடுத்தனர். எமக்கு வந்த சகல அழுத்தங்களுக்கு மத்தியிலேயே நாம் இந்த சுதந்திரத்தை பெற்றுக்கொண்டோம் . அவ்வாறானவர்கள், நாடு சுதந்திரம் பெற்றது தொடர்பில் மக்கள் எவ்வாறான பதிலை வழங்கபோக்கிறார்கள் என்பதனையே அவதானித்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு பதிலளிக்கவேண்டிய நல்ல சந்தர்ப்பமே இந்த தேர்தலாகும்.