முல்லைத்தீவில் இராணுவத்தினர் அமைத்த வெசாக் கூட்டை மாடு மோதியதற்காக தமிழ் இளைஞனை சுட்ட இராணுவம் : விஜித ஹேரத் எம்.பி.!

May 10th, 2012 Save & Share

இராணுவத்தினர் அமைத்த வெசாக் வெளிச்சக் கூடுகளை மாடுகள் மோதி விட்டன என்பதற்காக முல்லைத்தீவில் செவ்வாய்க்கிழமை இராணுவத்தினரால் தமிழ் இளைஞர் ஒருவர் சுடப்பட்டுள்ளார். இதுதான் இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இலட்சணமாவென ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. விஜித ஹேரத் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மீள்குடியேற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வியெழுப்பிய விஜித ஹேரத் மேலும் கூறியதாவது:

இங்கு பேசிய ரஜீவ விஜேசிங்க எம்.பி. இராணுவத்தினர் எந்தத் தவறுகளும் குற்றங்களும் செய்வதில்லையெனக் கூறினார். இராணுவ வெற்றியை வைத்துக் கொண்டு இராணுவம் செய்த செய்யும் தவறுகளை மூடி மறைக்க முற்படக் கூடாது. இராணுவம் செய்யும் தவறுகளைக் கண்டித்து நடவடிக்கையெடுக்க அரசு முன்வர வேண்டும்.

முல்லைத்தீவில் உள்ள குமாரசுவாமி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இளைஞர் ஒருவர் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற மாடுகள் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த வெசாக் வெளிச்சக் கூடுகளைத் தட்டிவிட்டன என்பதற்காக அந்த இளைஞர் இராணுவத்தினரால் சுடப்பட்டுள்ளார். சூட்டுக் காயத்துடன் படுகாயமடைந்த நிலையில் உயிருக்குப் போராடிய அவர் வைத்தியசாலையில் கூட இராணுவத்தினரால் அனுமதிக்கப்படவில்லை.

அவ்விடத்திற்கு அம்பியூலன்ஸ் வர நீண்ட நேரம் ஆகியுள்ளது. அதன் பின்னர் ஹெலிகொப்டரில் அவ்விளைஞர் அநுராதபுரத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் வெளியே தெரிவிக்கக் கூடாதென இராணுவத்தினரால் அந்த இளைஞரின் குடும்பத்தினர் மிரட்டப்பட்டுள்ளனர். ஒரு தமிழ் இளைஞனின் உயிர் ஒரு வெசாக்கூட்டின் பெறுமதிக்கு நிகரானதா? இது தான் அரசு தமிழருக்குக் காட்டும் நல்லிணக்கமா?