ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்படும் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரப் பேரவை ஆதரவு!

February 29th, 2012 Save & Share

இலங்கையில் இடம்பெற்ற போர்க் காலச் சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூறுதல் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பேரவை தீர்மானித்துள்ளது. பிரசெல்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி விவகாரப் பேரவையின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் இலங்கை குறித்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

போர்க்காலச் சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூறும் விவகாரம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதை ஐரோப்பிய ஒன்றியம் ஊக்குவிக்கும் என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளி விவகார அமைச்சர்கள் பங்கு கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன் வைக்கவுள்ள அமெரிக்கா அந்த தீர்மானத்தை வலுப்படுத்துவதற்காக இராஜாங்கத் திணைக்களத்தின் மிக மூத்த அதிகாரியான மரியா ஒரேரோவை ஜெனிவாவுக்கு அனுப்பவுள்ளது.

இலங்கை மற்றும் சிரிய விவகாரங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் மரியா ஒரேரோ சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொது மக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான கீழ் நிலைச் செயலாளராகப் பணியாற்றி வரும் மரியா ஒரேரோ நாளை ஜெனிவா கூட்டத் தொடரில் உரை நிகழ்த்த வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் சில வாரங்களுக்கு முன்னர் இந்தத் தீர்மானம் தொடர்பாக இலங்கை அரசுக்கு முறைப்படி அறிவித்து எச்சரிப்பதற்காக றொபேட் ஓ பிளேக்குடன் கொழும்புக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.