பிரபாகரனும் பொட்டு அம்மானும் யுத்தம் செய்யமுடியாத நிலையில்-கருணா அம்மான்!

August 8th, 2008 Save & Share

அரச படையினர் கடந்த ஒரு வருடகாலத்துக்கு மேலாக மேற்கொண்ட தீவிர இராணுவ நடவடிக்கைகளில் புலிகள் இயக்கத்தினர் அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து கிழக்கு மாகாணப் பிரதேசங்கள் அனைத்தையும் இழந்துவிட்டதுடன், அண்மையில் மன்னார் மாவட்டத்திலிருந்தும் முற்று முழுதாகப் பின்வாங்கிவிட்டனர். இவ்வாறான பாரிய வெற்றிகளை அடைந்துள்ள அரச படையினர் தற்போது பயங்கரவாதிகளிடமிருந்து பிரதேசங்களை மீட்கும் இராணுவ நடவடிக்கையின் இறுதிக் கட்டமாக புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பிரதேசங்களை மீட்பதற்கான தீவிர தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு கிளிநொச்சி பிரதேசத்துக்குள்ளும் முல்லைத்தீவு பிரதேசத்திலும் வெற்றிகரமாக பிரவேசித்துள்ள அரச படையினர் அந்தப் பிரதேசத்துக்குள்ளான களமுனைகளிலும் புலிகளைப் பின்வாங்கச் செய்துள்ள நிலையில்இ புலிகள் இயக்கத்தினர் தமது இறுதியான படுதோல்விக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் புலிகள் இயக்கத் தலைவரும் மற்றும் பொட்டு அம்மான் உட்பட உயர்மட்டத் தலைவர்களும் தமது இயக்கத்தின் எதிர்காலத்தைக் காட்டிலும் தமது எதிர்காலத்தைப் பற்றியே சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதுபற்றி கிழக்குப் பிராந்திய முன்னாள் புலிகள் இயக்கத் தலைவரும் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஸ்தாபகரும் தற்போது கிழக்கில் முதலமைச்சர் பிள்ளையானுடன் இணைந்து செயற்படும் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தலைவருமாகிய விநாயகமூர்த்தி கருணா தெரிவிக்கையில், தற்போது படுதோல்விகளை அடைந்துள்ள நிலையில், புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனும் அடுத்த உயர்மட்டத் தலைவர் பொட்டு அம்மானும் தொடர்ந்து அரச படையினருக்கு எதிராக யுத்தம் செய்ய வேண்டிய நிலையைக் காட்டிலும் தமது உயிரைத் தாமே அழித்துக்கொள்ள வேண்டிய நிலையிலோ அல்லது உயிரைப் பாதுகாப்பதற்காகத் தப்பியோட வேண்டிய நிலையிலேயே உள்ளனர் எனவும், தவிரவும் தொடர்ந்து யுத்தம் செய்யக்கூடிய இயலுமையைப் பிரபாகரனும் அவருடைய மூத்த தலைவர்களும் இழந்துவிட்டதாகவும் அவ்வாறு யுத்தம் செய்வதற்கான வருங்காலத் திட்டம் எதுவும் தற்போது பிரபாகரனிடமோ பொட்டு அம்மானிடமோ கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.