சரத் பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை விசாரிப்பதற்கு இலங்கை எதிர்ப்பு!

November 3rd, 2009 Save & Share

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதரமாக இலங்கை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களை பயன்படுத்தும் நோக்கில் அவரை விசாரிப்பதற்காக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கைக்கான அமேரிக்க தூதுவரிடம் இலங்கை வெளியுறவு அமைச்சர் றோஹித போகொல்லாகம அவர்கள் பேச்சு நடத்தியுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை, நேர்காணல் ஒன்றுக்காக வரும் புதனன்று வருமாறு அழைத்துள்ளது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவே அது அவரை அழைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அமைச்சர் றோஹித போகொல்லாகம அவர்கள், ”ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்திருக்கக் கூடிய அனைத்து தகவல்களும் அவர் இலங்கை இராணுவத்தின் தலைவர் என்ற வகையில் அவருக்கு கிடைத்த வசதிகளின் அடிப்படியிலேயே அவருக்கு கிடைத்திருந்தன, ஆகவே அவற்றை அவர் பிறருக்கு சட்ட ரீதியாக கூறுவதானால், அது குறித்து முன்னதாகவே இலங்கை அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்” என்று கூறினார்.

கோத்தபாய ராஜபக்ஷ

இந்த தகவல்கள் இலங்கையினதும் அதனது மக்களினதும் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த தகவவல்கள் என்பதால், அவற்றை எந்த சூழ்நிலையிலும், அவர் வெளியிடுவதை இலங்கை அரசாங்கம் அனுமதிக்காது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த விவகாரம் குறித்து இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளினதும், உயர்மட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டிருப்பதால், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அது குறித்து, சரத் பொன்சேகா அவர்களை விசாரிக்கக் கூடாது என்றும் தாம் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதரிடம் கூறியிருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறினார்.

இப்படியான ஒரு விசாரணைக்காக ஜெனரல் சரத் பொன்சேகா அழைக்கப்பட்டிருப்பதை, வைத்துப் பார்க்கும் போது ஜெனரல் பொன்சேகாவுக்கும், பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபாயவுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டிருப்பதாக கொள்ளலாமா என்று கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் றோகித போகொல்லாகம அவர்கள், ” நான் அப்படி நினைக்கவில்லை” என்று பதிலளித்தார்.