புலிகளின் தோல்விக்கான காரணங்கள் – அர்ச்சுனன்!

October 30th, 2009 Save & Share

தமிழக பிரதிநிதிகளாக 9 இந்திய நாடாளமன்ற உறுப்பினர்களும், ஒரு ராஜ்சபா உறுப்பினருமாக 10 பிரதிநிதிகள் இலங்கை சென்றிருந்த போது, பல தமிழ் கட்சிகளின் தலைவர்களையும் முஸ்லீம் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து பேசியிருந்தனர். புலிகளின் தோல்விக்கு காரணம் என்ன என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளமன்ற உறுப்பினர் கே.எஸ் .அழகிரி, அவர்களை கேட்டபோது பிரதானமாக ஐந்து காரணங்களை தமிழ் தலைவர்கள் தனக்கு தெரிவித்தாக தமிழக பத்திரிகைகளுக்கு தெரிவித்துள்ளார். அவர் கூறிய காரணங்கள் பின்வருமாறு,

மிக சுத்தமாக தமிழ் பேசும் சில லட்சம் முஸ்லீம் மக்களை 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே புலிகள் பகைத்து கொண்டார்கள். (இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இது தொடர்பாக அழுத்தமான கருத்துக்களை தெரிவித்தாக கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்)

புலிகள் ஏனைய தமிழ் அமைப்புக்களுடன் சண்டை செய்யும் போது கூட கிடைக்காத அவப்பெயர், ராஜிவ் காந்தி கொலை மூலம் புலிகளுக்கு கிடைத்தது.மற்றைய நாடுகள் இவர்களை பயங்கரவாதிகளாக பார்க்க ஆரம்பித்து இருந்தன.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழர்கள் தயாரான போது, அதை பிரபாகரன் தடுத்தார்.அதுவே ராஜபக்ஸ ஆட்சியில் அமரக் காரணமானது.

புலிகள் அமைப்பில் முக்கியமான படைதளபதிகளாக கருணா உள்ளிட்ட கிழக்கு மாகாண ஆட்கள் இருந்தார்கள். கருணாவின் பிளவுக்கு பிறகு சில ஆயிரம் புலிகள் அமைப்பை விட்டு விலகிவிட்டார்கள். கரும்புலிகள் அமைப்பில் அதிகமாக இருந்தவர்கள் இவர்கள்தான். இது அமைப்பின் பலவீனத்திற்கு முக்கியமான காரணம்.

ஏற்கனவே தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலப்பரப்பைவைத்து அதில் ஆட்சியியை நடத்திகொண்டு அமைதியாகாமல், தமிழர் பகுதிகள் என்று பெரிய நிலப்பரப்பை எதிர்பார்த்து காத்திருந்தார் பிரபாகரன் என்று நான் சந்தித்த தலைவர்கள் பட்டியல் போட்டு சொல்கின்றார்கள் என்றார் அழகிரி.

மேற்கூறிய ஐந்து காரனங்களை காட்டிலும் பல காரணங்கள் இருப்பினும் முக்கியமான சில காரணங்களை பார்க்கலாம்.

ஈழ தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் தாமே என கூறிக்கொண்டு தமிழ் மக்களின் நியாமான உரிமை போராட்டத்தினை, மிகவும் கஸ்ரப்பட்டு முயற்சி செய்து பயங்கரவாத போராட்டமாக மாற்றியமை.

ஈழத் தமிழர்களின் மேல் சர்வதேச சமூகத்திற்கு இருந்த அனுதாபத்தினை துடைத்து எடுத்தமை.

ஈழத்தமிழர்களின் நட்பு சக்திகளை பகைவர்கள் ஆக்கியமை.

ஈழ தமிழர்களின் விடுதலைக்காக போராடுகிறோம் என்று கூறிக்கொண்டு இறுதி வரை அதனை செய்யாது தம்மை முதன்மை படுத்தியமை.

புலிகளை மலைபோல நம்பியிருந்த புலம்பெயர்ந்து வாழும் புலி ஆதரவாளர்களுக்கு இறுதி வரை பொய்யுரைத்தமை.

எப்பொழுதுமே யாரையும் நம்பாத புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதிநேரத்தில் புலம் பெயர்ந்து வாழும் தமது ஆதரவாளர்களையும், தமிழக தலைவர்கள் சிலரையும் நம்பியமை. (கிளிநொச்சியினை இழக்கப் போகின்றோம் என்பதினை பிரபாகரன் உணர்ந்தவுடன் முகாம்களில் இருந்த மக்களை சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறிவிட்டு, நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முடிவு செய்திருந்தார். ஆனால் ருத்திரகுமார் தலமையிலான வெளிநாட்டு புலி ஆதரவாளர்கள் இதனை விரும்பவில்லை. நாட்டை விட்டு வெளியேறிவிட்டால், மீண்டும் ஒரு கட்டுப்பாட்டு பிரதேசத்தினை உருவாக்குவது என்பது கடினமாகிவிடும் . ஆகவே நீங்கள் அவசரப்படவேண்டாம், நாம் எப்படியாவது சர்வதேச அளவில் பாரிய அளவு அழுத்தத்தினை கொடுத்து யுத்த நிறுத்தத்தினை கொண்டு வருவோம் என உறுதி அளித்திருந்தார்கள்.இவர்களின் முயற்சிகள் கைகூடவில்லை. யுத்த நிறுத்தத்தினை ஏற்படுத்துவதற்காக இலங்கை சென்று இருந்த பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் (France foreign minister Bernard Kouchner and British foreign secretary David Miliband) மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. படையினர் புதுமத்தாளன் பகுதியை சுற்றி வழைத்திருக்கையிலேயே இவ் வகையான கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இம் முயற்சிகள் யாவும் ,காலம் தாழ்த்தியே மேற்கொள்ளப்பட்டன. பிரபாகரன் புதுமத்தாளனுக்குள் இருக்கின்றார் என்பதினை படையினர் உறுதிப்படுத்தி கொண்டிருந்தமையினால், அவரை பிடிக்க வேண்டும் என்பதில் படைதரப்பு உசாராகவே இருந்தது.

அடுத்து வை.கோ தலமையிலான தமிழக தலைவர்கள் சிலர் பிரபாகரனுக்கு தமது தரப்பில் சில உறுதிகளை வழங்கியிருந்தார்கள்.ஊதியத்திற்கு உழைப்பவர்களின் உறுதிகளை நம்பியமை பிரபாரனின் கஸ்ரகாலமே ஆகும். இந்திய நாடாளமன்ற தேர்தலில் அம்மா 40 இடங்களில் வெல்லுவார், பின்னர் அவர் சொல்வதினையே மத்திய அரசு செவிசாய்க்கும், என்றெல்லாம் வை.கோ உறுதியளித்து இருந்தார். இதனாலேயே பிரபாகரன் இந்திய தேர்தல் முடிவுகள் வரும் வரையில், அதாவது16 ஆம் திகதி வரையில் காத்திருந்தார். அதுவும் கைகூட வில்லை என்றதும், 17 ஆம் இரவிற்கு பின்னர் 18 ஆம் திகதி அதிகாலை படையினரிடம் சரண் அடைந்தார். மோத்தத்தில் யாரையும் நம்பாத புலிகளின் தலைவர், புலம் பெயர்ந்த புலி தலைவர்களையும், தமிழக தலைவர்களையும் நம்பினார். அதுவே அவரின் வாழ்வின் முடிவிற்கான அத்தியாயமானது).

புலிகளின் தோல்விக்கான காரணங்கள் என்ன பதினை பார்த்த அதேவேளை ,புலிகளை புதுப்பிப்பதற்கு புலம் பெயர்ந்து வாழும் புலிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியளிக்குமா ? என்பதினை பார்ப்போம்!

புலம் பெயர்ந்த புலிகளே புலிகளின் வளர்சிக்கு எதிரிகளாவார். இலங்கை சென்ற தமிழக தலைவர்கள் சனியன்கள் என்றும் கோமாளிகள் எனவும் விமர்சித்து வருவதுடன் இந்திய எதிர்ப்பு வாதத்தினை தொடர்ந்து வளர்தெடுப்பது. புலிகளின் தலைவரும், மதியுரைஞரும் விதைத்துவிட்டு சென்ற இந்திய எதிர்ப்பு வாதத்தினை, போக்குவதற்கு இனி இருப்பவர்களாவது முயற்சிப்பார்கள் என்றால் , அவர்கள் தாம் அழிந்து போகின்றோம் என்று அடம் பிடிக்கின்றார்கள். தமது தலைவர் சாகவில்லை என்று கூறுவதன் மூலம் அவருக்கு யாரையும் அஞ்சலி செலுத்த விடவில்லை. தமிழகத்திற்கு காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ராகுல் காந்தி அவர்கள் சென்ற வேளை நடிகர் விஜய் அவரை சந்தித்து பேசியிருந்தார். இதனை கேள்விபட்டதும் கனடாவில் உள்ள புலிகளின் முகவர் அமைப்புக்களில் ஒன்றான படைப்பாளிகள் சங்கம், விஜய் படங்களை பகிஸ்கரிக்கப் போவதாக அறிவித்தனர். தலைவர் இறந்த பின்னராவது இந்திய அரசுடனான உறவினை வளர்ப்பதற்கான வழி வகைகளை பார்ப்பதினை விடுத்து , தமக்கு எதிராக மேலும் பகமைகளை வளர்க்கும் புத்தியற்ற நடவடிக்கைகளையே புலிகள் மேற்கொள்ளுகின்றனர். நடிகர் விஜய் அவர்கள் ஈழ தமிழ் பெண்ணை மணர்ந்தவர். வியாபாரத்திற்கு அப்பால்பட்டு அவருக்கு ஈழ தமிழர்கள் மீது ஏனைய நடிகர்களை காட்டிலும் அனுதாபம் இருக்கக் கூடும். அவருக்கு காங்கிரஸ் கட்சியில் இணையும் எண்ணம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. புலம் பெயர்ந்த புலிகளுக்கு புத்தி இருக்குமானால், அவரின் ஊடாக காங்கிரஸ் கட்சியுடன் நட்பை வளர்த்துக்கொள்வதினை முயற்சிக்க வேண்டுமே தவிர அவரையும் எதிரியாக்குவது, புத்தி சாதூர்யமான செயலாகுமா?

புலம் பெயர்ந்து வாழும் புலிகளே! உங்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் இல்லை என்பது பலருக்கு தெரியும். எனியாவது புத்திஜீவிகள்,கல்விமான்களின் கருத்துக்களை செவிசாயுங்கள். கடந்த 30 வருடங்களாக கல்விமான்களும் ,புத்திஜீவிகளும் , சிந்திக்கும் திறன் கொண்டவர்களும் கூறியதுதானே நடந்திருக்கின்றது? நீங்கள் அழிந்து போகப் போகின்றோம் என்று அடம் பிடிப்பவர்கள் என்பது எங்களுக்கு தெரியும். அதனை கடந்த மே மாதம் 18 ஆம் நீங்கள் நிரூபித்து இருந்தீர்களே. உங்கள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் உங்களின் பின்னால் அணிவகுத்திருக்கும் ஒரு பகுதி மக்கள் குறித்தே நாம் கவலை கொள்ளுகிறோம். புலி என்ற அமைப்பிற்குள் இருந்து மனிதனாக உங்களினால் சிந்திக்க முடியாது என்பதினை உணருங்கள். இன்னமும் கனவுலகில்தான் நீங்கள் வாழ்கின்றீர்கள் என்பதினை உங்களினால் உணர முடியவில்லையா? (Don’t you realize, still you are live in fantastic world?)

குறிப்பு; இந்த கட்டுரையின் கருத்துக்கள் அர்ச்சுனன் ஆகிய எனது கருத்துக்களே அன்றி இணையதளத்தின் கருத்தாகாது.