ஜ.நா.சான்றிதழுக்கு பின்னரே மக்கள் மீள்குடியமர்வு-ஆறுமுகம் தொண்டமான்!
கண்ணிவெடிகளை அகற்றுவது, மனிதநேய அடிப்படையிலான உதவிகளை செய்வது குறித்து ஜ.நா.அமைப்பு சான்றிதழ் அளித்த பின்னரே முகாம்களில் மிகிதம் உள்ள 1.86 லட்சம் தமிழ்மக்கள் மறு குடியமர்த்தப்படுவார்கள் என அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியை நேற்றுமாலை சந்தித்து பேசியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், முகாம்களில் 3 லட்சம் தமிழர்கள் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் 1.86 லட்சம் தமிழர்களே உள்ளனர். தமிழகத்தில் இருந்து எம்.பி.க்கள் குழு வருவதற்கு முன்னரே 24 ஆயிரம் தமிழர்கள் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழக எம்.பி.க்கள் குழு வந்து சென்ற பின்னர் 57 ஆயிரம் தமிழர்கள் அவர்களின் வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எம்.பி.க்கள் குழுவின் வருகைக்கு பிறகு தமிழர்களை வாழ்விடங்களுக்கு அனுப்பும் பணி இருமடங்காக அதிகரித்துள்ளது.
மிகிதம் உள்ள மக்களை ஜ.நா. சான்றிதழ் அளித்த பிறகே மீள்குடியேற்றம் செய்யமுடியும் என்பதையும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுத்து அனுப்பிய வாழ்த்து செய்தியையும், அங்கு இடம்பெறும் புனரமைப்பு பணிகள் குறித்தும் முதல்வர் கருணாநிதிக்கு விளக்கியுள்ளேன் என்றும் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கையில் தமிழ்மக்கள் வாழும் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் இந்திய குழு ஈடுபட்டு வருகிறது. மேலும் ஒரு குழுவை அனுப்புவதாக இந்திய அரசு கூறியுள்ளது.
தமிழ் மக்களை அவர்களின் வாழ்விடங்களுக்கு அனுப்ப, ஜ.நா.விடம் இருந்து சான்றிதழ் பெறுவது அவசியம். தமிழர் வாழ்விடங்களில் கண்ணிவெடிகள் ஏதுமில்லை என்றும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள், வருமானத்துக்கான வழி போன்றவை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன எனவும் அகதிகள் நலவாழ்வுக்கான ஜ.நா.அமைப்பின் அதிகாரியிடம் இருந்து சான்றிதழ் பெறவேண்டும்.
இப்போது 1.86 லட்சம் தமிழர்களின் வாழ்விடங்களில் கண்ணிவெடிகளை அகற்றுவதுதான் பிரச்சனையாக உள்ளது. குடியமர்த்தப்பட்ட பிறகு, அவர்கள் தொழில் செய்யவோ, விவசாயம் செய்யவோ உதவி செய்கிறோம்.
இலங்கையின் நிவாரண பணிகளை மேற்கொள்ள மேலும் 500 கோடி ரூபா தருவதாக இந்திய அரசு கூறியுள்ளது. இதற்கான திட்டத்தை இலங்கை அரசின் சார்பில் கொடுக்க இருக்கிறோம். எந்தெந்த திட்டங்களுக்கு இந்த பணத்தை செலவிடுவது என்பது குறித்து விவாதிக்க இலங்கை அதிகாரிகள் குழு இந்தியா வரவுள்ளது என்றும் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
