சரத் பொன்சேகாவின் கூற்றுக்கு கருத்து கூற விரும்பாத அமைச்சரவை பேச்சாளர் அனுர பிரியதர்சன யாப்பா!
பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவில் வைத்து தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் கருத்துக் கூறுவதற்கு விரும்பவில்லை என ஊடகத்துறை அமைச்சரும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான அனுர பிரியதர்சன யாப்பாவிடம் கேள்விகளை கேட்டனர்.
பாதுகாப்பு படைகளின் பிரதானி கூறியிருக்கும் கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
என்று கேள்வி எழுப்பியதுடன் படைகளில் பணியாற்றுகின்ற உயரதிகாரிகளின் பெயர்களை அரசியல் நோக்கத்திற்கான பயன்படுத்தும் ஊடகங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அவ்வாறாயின் ஊடக தணிக்கை ஏதும் செய்யப்பட்டுள்ளதா? என்றும் கேள்வி எழுப்பினர்.
கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்த அமைச்சர் படையினரின் நலனில் இந்த அரசாங்கம் கூடுதலான அக்கறை காட்டிவருக்கின்றது. கடந்த காலங்களில் சேவையாற்றி உயரதிகாரிகளுக்கு மட்டுமல்லாது எதிர்கால உயரதிகாரிகளுக்கு உரிய சகலவிதமான விடயங்களையும் அரசாங்கம் செய்துகொடுத்துள்ளது. இந்நிலையில் கருத்து கூற விரும்பவில்லை என்றார்.
இதேவேளை இராணுவத்தில் சேவையாற்றுபவர்களின் பெயர்களை பயன்படுத்துவது தொடர்பில் சில சம்பிரதாயங்கள் இருக்கின்றன.
இராணுவ சட்டத்தின் பிரகாரம் சிலவற்றை செய்யமுடியாது. எனினும் ஊடகங்களுக்கு இவ்வாறான அறிவிப்புகள் விடுக்கப்பட்டனவா? என்பது தொடர்பில் எனக்கு தெரியாது தகவல்களை பெற்று கருத்து தெரிவிக்கின்றேன் என்றார்.
