முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ்மக்கள் மீள்குடியேற்றம் குறித்து இலங்கை-இந்திய வெளியுறவு அமைச்சர்கள் நியூயோர்க்கில் பேச்சு!
அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை குடியமர்த்தும் பிரச்னை தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகலகாமாவுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பேச்சு நடத்தினார். நியூயார்க்கில் புவி தட்ப வெப்ப மாற்றம் குறித்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள இலங்கை வெளியுறவு அமைச்சருடன் இது தொடர்பாக எஸ்.எம். கிருஷ்ணா பேச்சு நடத்தினார்.
இலங்கையில் போர் முடிந்த பிறகும் அகதிகள் முகாம்களில் லட்சக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போதிய வசதியின்றி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகளின் அவல நிலை தொடர்பாக அமெரிக்கா ஏற்கெனவே தனது கவலையை வெளியிட்டுள்ளது. இந்த விஷயத்தில் இலங்கை அரசு விரைந்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்து 2 மாதங்களாகியும் முகாம்களில் 3 லட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு மனித உரிமை மீறல் நடைபெறுவதாக சர்வதேச அளவில் இலங்கை மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
இதனிடையே நியூயார்க் வந்துள்ள இலங்கை வெளியுறவு அமைச்சரிடம் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பேச்சு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை அவர்கள் ஏற்கெனவே வசித்த இடங்களில் தங்க வைப்பது குறித்து இலங்கை அமைச்சருடன் பேசியதாக கிருஷ்ணா தெரிவித்தார்.
இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் உள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இது முடிந்தவுடன் அப்பகுதியில் மக்களை குடியமர்த்தும் பணி மேற்கொள்ளப்படும் என பொகலகாமா தெரிவித்ததாக கிருஷ்ணா கூறினார்.
அதிகாரப் பகிர்வு குறித்து பேச்சு நடத்தவில்லை என்று குறிப்பிட்ட கிருஷ்ணா, இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் அவர்கள் வசித்த இடங்களில் குடியமர்த்தும் வேலைகளில் அவர்கள் கவனம் செலுத்திவரும் நிலையில் அவர்களிடம் இப்போது அதிகாரப் பகிர்வு குறித்து பேசுவது சரியாக இருக்காது என்றும் குறிப்பிட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காகவே வடகிழக்கு இலங்கையில் மக்கள் மீண்டும் குடியமர்த்தப்படவில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
