சணல்-4 செய்திக்கு இராணுவ பேச்சாளர் மறுப்பு! உண்மையில் என்ன நடந்தது?
பிரித்தானியாவில் இருந்து ஒலிபரப்பாகும் சணல்-4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ ஒளிப்திவு புலிகளால் பிரச்சாரத்துக்காக சோடிக்கப்பட்டது என்றும், அதில் காண்பிக்கப்படுவது போன்று தமிழ் மக்களை சித்திரவதை செய்யவில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதனை ஏற்கனவே மறுத்துள்ள பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவர் தமிழர்களுக்கு எதிரான இவ்வாறான சம்பவங்களில் இராணுவத்தினர் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வீடியோவில் காண்பிக்கப்படும் சம்பவங்களில் தெரிவிக்கப்படுவது போன்று இலங்கை இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக்கி பின்புறமாக கைகளையும், கண்களையும் கட்டிவிட்டு அருகில் இருந்து சுடுவது, அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் என்று பலரது உடல்கள் அருகே காணப்படுவது போன்ற வீடியோ ஒன்றினை மேற்படி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனை மறுத்துள்ள இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார இதில் உண்மையில்லை எனவும், இவ்வாறான சம்பவங்கள் இங்கு இடம்பெறவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
இவ் வீடியோ ஒளிப்பதிவு ஊடகவியலாளர் அமைப்பினால் வழங்கப்பட்டுள்ளதாக சணல்-4 செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ் வீடியோ போன்று கடந்த காலங்களில் பல புகைப்படங்கள் வேறு நாடுகளில் நடைபெற்ற சம்பவங்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டு இலங்கையில் நடைபெற்றது போன்று சோடிக்கப்பட்டு செய்திகள் வெளியாகியிருந்தன என்றும், வன்னியில் இறுதியில் என்ன நடைபெற்றது என்பன குறித்த சரியான தகவல்கள், நிலவரங்கள் தொடர்பான உண்மை தகவல்களை இன்றுவரை தம்மால் பெறமுடியாதுள்ளது எனவும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நெருப்புக்கு தெரிவித்துள்ளதுடன், யுத்தம் இடம்பெற்று கொண்டிருந்தபோது செய்தியாளர்கள் எவரும் யுத்தமுனைக்கு சென்று சுதந்திரமாக செய்திகளை சேகரிக்க முடியாதவாறு அரசு தடைவிதித்திருந்ததையும் சுட்டிக்காட்டினார்.



