கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு அமெரிக்கா ஆறு மில்லியன் அமெரிக்க டொலர் உதவி!
வட இலங்கையில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு ஐக்கிய அமெரிக்கா ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்குவதாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகத் தத்தமது வீடுகளுக்குத் திரும்புவதற்கு உதவும் விதத்தில், இலங்கையின் வட மாகாணத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்காக, ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் இந்நிதியை வழங்குகின்றது.
ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், ஆயுத அகற்றலும் தணித்தலும் பற்றிய அரசியல், இராணுவ விவகார அலுவல் பணியகத்தினூடாக (State / Pmwra) வழங்கப்படும் இந்நிதி, தற்பொழுது இலங்கையில் கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள, அரச சார்பற்ற நான்கு அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அரச சார்பற்ற அமைப்புகள், கண்ணி வெடிகளை அகற்றுதல் தொடர்பான தமது ஆற்றலை அதிகரிப்பதற்கும், அடுத்துவரும் பன்னிரண்டு மாதங்களில் தமது பணியை விஸ்தரிப்பதற்கும் இம்மேலதிக நிதி இடமளிக்கும் என தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருக்கக்கூடிய நிலங்களை பற்றிய மதிப்பீடுகள், கண்ணி வெடிக் களங்கள் பற்றிய தொழிநுட்ப ரீதியான அளவாய்வுகள், கண்ணி வெடிகளை அகற்றுதல், வெடிக்காத படைக் கலங்களை அழித்தல் என்பன கண்ணி வெடி அகற்றும் செயன்முறையில் இடம்பெறுகின்றது.
டென்மார்க், கண்ணி வெடி அகற்றும் குழு (DDG) இகண்ணி வெடி நடவடிக்கைகளுக்கான ஸ்விஸ் மன்றம் (FSD) இஹேலோ நம்பிக்கைப் பொறுப்பு, கண்ணி வெடி மதியுரைக் குழு (MAG) என்பன இந்நன்கொடையைப் பகிர்ந்து, அளவை அணிகள், கண்ணி வெடி அகற்றும் அணிகள் என்பவற்றிற்கு மேலதிக அலுவலர்களை அமர்த்துவதற்கும் கண்ணி வெடிகளை அகற்றுவதற்குப் புதிய சாதனங்களைக் கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்தும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்நிதியை வழங்கி, வட இலங்கையில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு இந்நிதியை அளிப்பது பற்றி ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் மகிழ்ச்சியடைகின்றது”| என்று பிரதித் தூதுவர் ஜேம்ஸ் ஆர். மூர் கூறினார். “மக்கள் தத்தம் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லக்கூடிய செயன்முறையில், கண்ணி வெடி அகற்றுதல் ஒரு முக்கிய படியாகும். இடம்பெயர்ந்த அனைவரையும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் அவரவர்களது இல்லங்களுக்கு அனுப்புவது பற்றி இலங்கை அரசாங்கத்தின் அக்கறையை நாம் ஆதரிக்கின்றோம்” என்று அவர் தொடர்ந்து கூறினார்.
பாதுகாப்புச் செயலாளரின் அலுவலகம், ஐக்கிய அமெரிக்க பசிபிக் கொமாண்டோ, விசேஷ இயக்க கொமாண்டோ பசிபிக், ஐக்கிய அமெரிக்க பசிபிக் இராணுவம் என்பவற்றைச் சேர்ந்த கண்ணி வெடி அகற்றும் இராணுவ, குடியியல் நிபுணர்களைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கக் குழு ஒன்றை உள்ளடக்கிய, மனிதாபிமான கண்ணி வெடிச் செயற்பாட்டின் (HMA) அணி, ஜூன் மாதம் 22ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை இலங்கைக்கு ஒரு விஜயத்தை மேற்கொண்டது.
இலங்கையின் வடக்கில், இலங்கை இராணுவம் மேற்கொண்டுள்ள, கண்ணி வெடி அகற்றும் மனிதாபிமான முயற்சிகளுக்கு, மிகச் சிறந்த வகையில் ஐக்கிய அமெரிக்கா எவ்வாறு உதவலாம் என்பதை இனங்காண்பதற்காக, கண்ணி வெடிகளை அகற்றுவதில் ஈடுபட்டுள்ள, இலங்கை அரசாங்க அலுவலர்கள் பலரையும் இலங்கை இராணுவத்தினரையும், அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் இவ்வணி சந்தித்தது வட மாகாணத்தில், கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தினருக்கு, ஐக்கிய அமெரிக்க பசிபிக் கொமாண்டினூடாக, ஐக்கிய அமெரிக்க இராணுவம், சாதனங்களையும் பயிற்சியையும் வழங்கும்.
அவசர உணவு உதவியாக வழங்கப்பட்ட 42 மில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்க டொலர்கள், உணவு தவிர்ந்த நிவாரணமாக வழங்கப்பட்ட பதினொரு மில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்க டொலர்கள் என்பன உட்பட, 2008ஆம் ஆண்டிலும் 2009 ஆம் ஆண்டிலும் மனிதாபிமான உதவியாக 68 மில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்க டொலர்களை ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது. இவ்வுதவியின் பெரும் பகுதி, மோதல்களினால் வடக்கில் இடம்பெயர்ந்த இலங்கை மக்களுக்கு உதவுவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டுமென்று பணிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
