வவுனியா நலன்புரி முகாம் மக்கள் மழை வெள்ளத்தால் பாரிய அசௌகரியம்-டி.யு.குணசேகரா!
சுமார் இரண்டரை இலட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் சீரான வடிகாலமைப்பு வசதிகள் இன்மையினால் மழையிலும் வெள்ளத்திலும் அந்த மக்கள் பாரிய அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர். இது தொடர்பில் அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும் என்று அமைச்சர் டியூ குணசேகர நேற்று சபையில் வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வுகளின்போது விசேட கூற்று ஒன்றை விடுத்து பேசுகையிலேயே அவர் மேற்படி வேண்டுகோளை முன்வைத்தார். இங்கு அவர் மேலும் கூறுகையில்இ கடந்த 16ஆம் திகதி வவுனியா இடைத்தங்கல் முகாம்களுக்கு சென்றிருந்த போது அந்த சந்தர்ப்பத்தில் அங்கு தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களின் அவல நிலையை என்னால் உணர முடிந்தது.
காலநிலை மாற்றம், பருவப் பெயர்ச்சி காரணமாக முகாம்களுக்குள் மழைநீர் புகுந்ததினால் அந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். இரண்டரை இலட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் மழைநீர் வழிந்தோடுவதற்கான வடிகால்கள் அமைக்கப்பட்டிருக்கவில்லை. கூடாரங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்த மக்களின் அவலநிலை குறித்து மக்கள் பிரதிநிதிகளும் மற்றும் பொது மக்களும் நிலைமைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டதற்கமையவே நான் பிரதமரின் கவனத்திற்கு இதனைக் கொண்டு வருகிறேன். இது மட்டுமல்லாது தற்போது பெய்து வருகின்ற மழை காரணமாக இரத்தினபுரி, காலி, களுத்துறை உள்ளிட்ட சில தென்பகுதி பிரதேசங்களும் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளன.
இந்த பகுதிகளிலும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
