யாழ் தேர்தலில் 90 ஆயிரம் பேர் அரசை நிராகரித்துள்ள நிலையில் 10 ஆயிரம் வாக்குகளை சாதனையாக கூறுகின்றது அரசு!
யாழ்.மாநகரசபைத் தேர்தலில் 90 சதவீதமான மக்கள் அரசாங்கத்தை முற்றாக நிராகரித்திருப்பதோடு 80 சதவீதமானோர் தேர்தலையே புறக்கணித்துச் செயற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 10 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதனை சாதனை வெற்றியாகக் காட்ட முனைவதைக் கேலி செய்துள்ளது.
தேர்தலை நடத்துவதற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தித்தராமல் கட்டுப்பாடுகளைப் போட்டு சர்வாதிகாரப் போக்கில் அரசு செயற்பட்டதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் வவுனியா தேர்தல்களுக்குப் பொறுப்பாகச் செயல்பட்டவருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன மேற்கண்டவாறு விளக்கமளித்தார்.
அவர் மேலும் தெளிவுபடுத்துகையில் கூறியதாவது;
யாழ்.மாநகரசபைக்கும் வவுனியா நகரசபைக்கும் தேர்தலை நடத்த அரசு திடுதிப்பென நடவடிக்கைகளை மேற்கொண்ட போது புளொட் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தனும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரியும் தேர்தலை நடத்தக் கூடிய சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தாமல் நடத்த வேண்டாமெனவும் ஒழுங்கு நிலை உருவாகும் வரை தேர்தலைத் தள்ளிவைக்குமாறும் அரசாங்கத்திடம் வலியுறுத்தினர். ஆனால், அரசாங்கம் அதற்குச் செவிசாய்க்கவில்லை. அதிகாரத்தை தம்வசப்படுத்தும் நோக்கில் தேர்தலை நடத்துவதில் உறுதியாக நின்றது.
பாரிய நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்க்கட்சிகள் எதிர்நோக்க வேண்டியேற்பட்டது. ஜனநாயக உரிமையை பாதுகாப்பதற்காக இந்தச் சவாலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி முகம் கொடுத்தது. யாழ். மாநகரசபைத் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்துவதற்காக நானும் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோரும் விமான மூலமாகவே யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். ஏ9 வீதியூடாகப் போவதற்கு எமக்குத் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டே வருகின்றது. ஆளும் தரப்பு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எங்கும் தாராளமாக போய்வர அனுமதிகிடைக்கின்றது.
எதிர்க்கட்சிகளுக்கு முக்கியமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு அனுமதி வழங்கப்படுவதே இல்லை. ஜனநாயக நாட்டில் மோசமானதொரு அரசியல் கலாசாரம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவுக்குப் போவதற்குக் கூட நாம் பாதுகாப்பு அமைச்சினதும் மதவாச்சி படைமுகாமிலும் அனுமதி பெற்றாக வேண்டிய நிலையேற்பட்டது. ஜனநாயக அரசியலில் ஈடுபடவும் பாதுகாப்புத் தரப்பின் அனுமதி பெற வேண்டியுள்ளது.
இத்தகைய பலத்த சவால்களை எதிர்கொண்டே நாம் பிரசாரப் பணியை மேற்கொண்டோம். யாழ். மாநகரசபைத் தேர்தலில் ஆக 18 சதவீதமானோர் வாக்களித்திருந்தனர். 82 சதவீதமான மக்கள் வாக்களிப்பைத் தவிர்த்துக்கொண்டனர். யாழ்.மாநகர மக்கள் தேர்தலை புறக்கணித்திருக்கும் நிலையிலும் அரசு சாதனை வெற்றியைப் பெற்றிருப்பதாக வெட்கமின்றி கூப்பாடு போடுகின்றது. யாழ். தபால் நிலையத்தில் வாக்களிப்பு தினத்தன்றும் கூட 33,774 வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படாத நிலையில் குவிக்கப்பட்டுக் கிடந்ததை தபாலதிபரே தெரிவித்திருக்கிறார்.
வவுனியா நகரசபைத் தேர்தலில் 40க்கும் 45 சதவீதத்துக்குமிடைப்பட்ட மக்களே வாக்களிப்பில் கலந்து கொண்டனர். அங்குள்ள மக்கள் அரசுக்கு சரியான பதிலடியைக் கொடுத்துள்ளனர். வடக்கு மக்களுக்கு அவர்களது ஜனநாயக அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்துக் கொடுப்பதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைளை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டுள்ளது. அதற்கான அடிப்படைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
17 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வரப்பட்டதன் பின்னர் எண்ணற்ற தேர்தல்களை நாடு சந்தித்துள்ளது. இன்னமும் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு பொலிஸ் ஆணைக்குழு அரசசேவைகள் ஆணைக்குழுகளை அமைப்பதை அரசு தள்ளிப்போட்ட வண்ணமே உள்ளது. இவற்றைச் செய்யத் தவறுவதன் காரணமாக மக்கள் ஜனநாயக தேர்தலின் மீது சந்தேகம் கொண்டுள்ளனர். அதன் பிரதிபலிப்பை யாழ், வவுனியா தேர்தல்களில் கண்டுகொள்ள முடிகிறது.
வடக்கின் வசந்தம்? பற்றிப் பேசுபவர்கள் வன்னியில் அகதிமுகாம்களை அமைத்து அகதி மக்களை வதைத்து வருகின்றனர். அந்த மக்களை சுதந்திரமாக நடமாடவிட்டு அடிப்படை உரிமைகளை வழங்குவதன் மூலமே வடக்கில் உண்மையான ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப முடியும். அரசாங்கம் அதைச் செய்யும் என எதிர்பார்க்கவே முடியவில்லை.
