மலேசிய தலைநகர் கோலலம்பூரில் கே.பி. கடத்தல் அல்லது கைது!
புலிகளின் புதிய தலைவர் கே.பி. பத்மநாதன் அல்லது செல்வராஜா பத்மநாதன் மலேசியாவில் கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மலேசிய தலைநகர் கோலலம்பூரில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொள்வதற்காக சென்றபோதே இவர் கடத்தப்பட்டுள்ளதாக புலிகள் சார்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
புலிகளின் அரசியல் பொறுப்பாளராக இருந்து முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட நடேசனின் சகோதரர் மற்றும் அவரது மகன் ஆகியோரை சந்திக்க சென்றபோதே இவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ் கடத்தலை இலங்கை புலனாய்வு துறையும், மலேசிய புலனாய்வு துறையும் இணைந்தே மேற்கொண்டதாக புலிகள் சார்பு செய்திகள் குற்றம் சாட்டிவருகின்றன.
கடந்த புதன்கிழமை கடத்தப்பட்ட அல்லது கைது செய்யப்பட்ட கே.பி. என்றும் குமரன் பத்மநாதன் என்றும் அழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. புலிகளின் ஆயுத கொள்வனவுக்கு பொறுப்பாக இருந்துவந்த கே.பி. சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வந்ததுடன் இந்திய பிரதமர் அமரர் ராஜீவ் கொலை தொடர்பாகவும் இவர் தேடப்பட்டு வருபவர். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மே மாதம் 17ம் திகதி முள்ளி வாய்க்காலில் கொல்லப்பட்டபோது அதனை முதலில் மறுத்திருந்த கே.பி. பின்னர் அதனை ஏற்றுக்கொண்டு அறிக்கை வெளியிட்டதுடன். தானே புலிகளின் தலைவர் என்றும் கூறிக்கொண்டு செயற்பட்டுவந்ததுடன் நாடுகடந்த தமிழீழம் என்ற பெயரில் அறிக்கைபோர் நடாத்தி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கே.பி. என்ற பத்மநாதனுக்கும் அமெரிக்காவில் உள்ள புலிகளின் விஸ்வநாதன் உருத்திரகுமார் என்பவருக்குமிடையே தலைமை பொறுப்பு தொடர்பாக ஆரம்பத்தில் முறுகல் நிலை இருந்துவந்ததும், பின்னர் உருத்திரகுமாரை நாடு கடந்த தமிழீழத்தின் செயற்குழு தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில் அது சற்று தணிந்திருந்தது. இவர்களுக்குள் மட்டுமல்ல புலிகளின் கணிசமானோர் கே.பி.யை துரோகி என்றும் வர்ணித்து தலைவர் பிரபாகரனை காட்டி கொடுத்த துரோகி கே.பி. என்றும் இவராலேயே பிரபாரகரன் கொல்லப்பட்ட நேர்ந்தது என்றும் புலிகளின் ஒருசாரரின் கருத்து. இந்த நிலையிலேயே கே.பி. கைது செய்யப்பட்ட விடயத்தை இலங்கை அரசு வியாழக்கிழமை நேற்றையதினம் வெளியிட்டது.
இதனை ஆரம்பத்தில் பலரும் நம்பமறுத்தபோதும், அதுவே புலிகளின் பினாமிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ் கைதுகளின் தொடர்ச்சியாக மேலும் பலர் ஜரோப்பிய, அமெரிக்க, அவுஸ்திரேலிய நாடுகளில் கைது செய்யப்படலாம் என்றும் நிதி வசூலிப்பு செய்தோர், ஆயுத கொள்வனவுக்கு உதவியோர் என்பது உட்பட வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்து விபரங்கள் கூட கே.பி. மூலம் அம்பலத்திற்கு வரவுள்ளதுடன் இதன் தொடர்ச்சியாக மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்றும் நம்பகரமான வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குமரன் பத்மநாதன் கைதின் பின்னணியில் புலிகள்.புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக பிரபாகரனால் நிமியக்கப்பட்ட கே.பி. கைது செய்யப்படுவதற்கு தகவல் வழங்கியோர் புலிகளே என்றும் தெரியவந்துள்ளது. புலிகளுக்குள் ஏற்பட்ட பதவிப்போட்டி, சொத்து பிரச்சினைகள் காரணமாகவே கே.பி.யை பற்றிய இரகசிய தகவல்களை புலிகளே வழங்கி அவர் கைது செய்யப்படுவதற்கு உதவியதாக இன்னுமொரு தகவல் தெரிவிக்கின்றது. எது என்னவாக இருந்தாலும், இன்னும் பல திடுக்கிடும் தகவல்களும் கைதுகளும் இடம்பெற போகின்றது என்பது மட்டும் உறுதியாக தெரிகின்றது.



