வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள சிறார்களுக்கு உதவ அவசர நிதியுதவி வழங்குமாறு கோரிக்கை!
வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள சிறுவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்க அவசர நிதியுதவி வழங்குமாறு எஸ்.ஓ.எஸ். சிறுவர்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையில் 29 வருடங்களாக சேவையாற்றிவரும் எஸ்.ஓ.எஸ். அமைப்பு மட்டுமே வவுனியா நலன்புரி முகாம்களில் சிறுவர்களுக்கான பணிகளுக்கு அனுமதிக்கப்பட்ட நிறுவனமாகும்.
வவுனியாவின் வடபகுதியில் எந்தப் பகுதிக்கும் சென்றுவருவதற்கு எஸ்.ஓ.எஸ்.ஸின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வவுனியாவில் 5 வருட உதவித்திட்டம் ஒன்றுடன் 1990 முதல் அப்பகுதியில் தனது பணிகளை ஆரம்பித்திருந்தது எஸ்.ஓ.எஸ்.
வவுனியா நலன்புரி முகாம்களில் பல நூற்றுக்கணக்கான சிறுவர்கள் எந்தவித ஆதரவுமற்ற நிலையில் அவசர உதவியை நாடிநிற்கின்றனரென எஸ்.ஓ.எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது. வவுனியா முகாம்களுக்கு அருகில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுவர்களுக்கான புகலிடங்களை அமைக்க அரசு எஸ்.ஓ.எஸ்.ஸுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
முகாம்களிலுள்ள பல நூற்றுக்கணக்கான சிறுவர்களுக்கான அடிப்படைச் சுகாதாரத் தேவைகள், உணவு, மருந்து, உடை மற்றும் விளையாட்டுப் பொருட்களை உடனடியாக வழங்கவேண்டியுள்ளதாகவும் எஸ்.ஓ.எஸ். தெரிவித்துள்ளது.
